Wednesday, March 2, 2011

வாழைக்காய்ப் பால்கறி

தேவையானவை:
வாழைக்காய் - பெரியது ஒன்று
தேங்காய் - ஒன்று
பொட்டுக் கடலை - 100 மில்லி
பச்சை மிளகாய் - 6  
பெருஞ்சீரகம் - சிறிது
பட்டை - ஒன்று
கிராம்பு  - ஒன்று
மிளகு - 15  
கறிவேப்பிலை - சிறு கொத்து
பூண்டு - 4 பல்
மஞ்சள் - சிறிது
இஞ்சி - சிறு துண்டு
உப்பு - தேவையான அளவு
வெங்காயம் -  4
நெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
முதலில் இஞ்சியை தோல் உரித்து கழுவிக் கொண்டு,பூண்டையும் தோல் உரித்து, அத்துடன் பச்சை மியாகாயையும் சேர்த்து விழுது போல அரைக்கவும். பெருஞ்சீரகம், பொட்டுக் கடலை இரண்டையும் சேர்த்து தனியாக அரைத்து வைக்கவும். மிளகை சிறிது நெய்யில் வறுத்துப் பொடி செய்து கொள்ளவும். தேங்காயைத் துருவி சிறிது நீர் சேர்த்து அரைத்து ஒரு தம்ளர் கெட்டியாக பால் எடுக்கவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 2 தம்ளர் தண்ணீர் ஊற்றவும். சதுரமான துண்டுகளாக வாழைக்காயை நறுக்கிப் போடவும். தேவையான உப்பு, மஞ்சள் பொடி போடவும். வெந்ததும் இறக்கி விடவும்.
இன்னொரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சிறிது நெய் ஊற்றவும். காய்ந்ததும் பட்டை, கிராம்பு போடவும். வெடித்ததும் அரைத்த பச்சை மிளகாய் மசாலாவைப் போடவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிப் போட்டு வதக்கவும். வதங்கியதும் வெந்த வாழைக்காயை அதிலுள்ள தண்ணீருடன் சேர்த்து எடுத்து ஊற்றி, கிளறி விட்டு கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு மிளகுப் பொடி போட்டு, ஒரு தட்டினால் மூடவும். பத்து நிமிடம் கொதித்ததும் தயாராக வைத்துள்ள தேங்காய்ப் பாலில் அரைத்த பொட்டுக்கடலை விழுதைக் கரைத்து ஊற்றி, இன்னொரு பத்து நிமிடம் கொதிக்க வைத்து கரண்டியினால் அடிப்பிடிக்காமல் கிளறி விட்டு இறக்கவும்.

No comments:

Post a Comment