Thursday, February 24, 2011

முளைக்கீரை புளிக்குழம்பு:

முளைக்கீரை ஒரு கத்தை 400 கிராம் கீரையை மட்டும் ஆய்ந்து, சன்னமாய் அரிந்து, அலம்பிக்கொள்ளவும். அடுப்பில் ஒரு சட்டியை வைத்து மூன்று தேக்கரண்டி நெய் விட்டு கால் தேக்கரண்டி சீரகம் போட்டு வெடித்ததும் அரிந்து வைத்துள்ள கீரையைப் போட்டுப் புரட்டிக் கொடுக்கவும். பிறகு 100 மில்லி பசும்பாலை அதில் விட்டு கொதிக்க விடவும். பால் நன்றாய் சுண்டி கீரை வெந்ததும் மத்தால் மசித்துப் பொடி செய்து கொஞ்சம் உப்புப் போட்டு மீண்டும் மசித்து எடுத்துக் கொள்ளவும்.

300 மில்லி ஜலத்தில் எலுமிச்சங்காய் அளவு புளியும் 2 தேக்கரண்டி உப்பும் போட்டுக் கரைத்துக் கொள்ளவும்.

மிளகாய் வற்றல் 3 , கடலைப் பருப்பு ஒரு தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு அரைத் தேக்கரண்டி, மிளகு 6 , வெந்தயம் கால் தேக்கரண்டி, தேங்காய்த் துருவல் 4 தேக்கரண்டி இவற்றை நெய்விட்டு வறுத்துக் கரகரப்பாக அரைத்து புளி ஜலத்தில் போட்டுக் கொதிக்க விடவும்.

குழம்பு கொதித்து மசாலை நெடி போனதும் தயார் செய்து வைத்திருக்கும் கீரை மசியலைப் போட்டுக் கொதிக்க விடவும்.

இரண்டு கொத்தி வந்ததும் இறக்கிக் கொண்டு தாளிப்புக்கு ஒரு பாத்திரம் வைத்து 2 தேக்கரண்டி நெய்விட்டுக் காய்ந்ததும், கடுகு கால் தேக்கரண்டி போட்டு வெடித்ததும் சிறு தக்காளிப் பழம் ஒன்றை 4 துண்டுகளாக்கி அரிந்து போட்டு வதக்கி பிறகு குழம்பைத் தாளிப்பில் கொட்டிக் கொதிக்கவிடவும்.

ஒரு தேக்கரண்டி அரிசி மாவு, சுண்டைக்காய் அளவு வெல்லம், கடலைப் பருப்பு அளவு பெருங்காயம் இவற்றைக் கால் ஆழாக்கு ஜலத்தில் கரைத்து குழம்பில் கொட்டி, ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

No comments:

Post a Comment