Thursday, February 24, 2011

பால் கட்டிக் குழம்பு

கால் லிட்டர் பாலைச் சுண்டக் காய்ச்சி இளம் சூடாக இருக்கும்போது ஒரு ஆழாக்குப் புளித்த தயிரை அதில் கொட்டிக் கிளறி மூடி வைக்கவும்.

சிறிது நேரத்தில் பால் முழுவதும் திரிந்து திரண்டு கொள்ளும். அதை அப்படியே ஒரு வெள்ளைத் துணியில் கட்டித் தொங்க விடவும். அரைமணி நேரத்திற்குப் பின்னர் ஜலம் எல்லாம் வடிந்து பால் மட்டும் தங்கிவிடும்.

அதை எடுத்து நன்றாகச் சேர்த்துப் பிசைந்து போதுமான அளவு பொடி செய்த உப்பு போட்டு நெல்லிக்காய் அளவு உருண்டைகள் உருட்டி நீராவியில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

மிளகாய் வற்றல் ஆறு, மஞ்சள் சிறிது, தனியா இரண்டு தேக்கரண்டி, பட்டை சிறு துண்டு, சோம்பு கால் தேக்கரண்டி, கிராம்பு இரண்டு, அனாரஸ் பூ ஒன்று, ஏலக்காய் இரண்டு, பொட்டுக் கடலை கால் ஆழாக்கு, கசகசா சிறிதளவு இவற்றைத் தனித்தனியே நல்லெண்ணையில் வறுத்து வெண்ணெய்ப் போல் அரைத்துக் கொள்ளவும்.

300 மில்லி ஜலத்தில் எலுமிச்சங்காய் அளவு புளி, உப்பு மூன்று தேக்கரண்டி போட்டு, அரைத்து வைத்திருக்கும் மசாலாவை அதில் போட்டு கரைத்துக் கொள்ளவும்.

பிறகு, சட்டியை அடுப்பில் வைத்து, மூன்று தேக்கரண்டி நெய் விட்டுக் காய்ந்ததும் வெந்தயம் 10 , கடுகு அரைக்கால் தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு ஒரு தேக்கரண்டி, அரிந்த வெங்காயம் 50 கிராம், கறிவேப்பிலை ஆர்க்கு ஒன்று போட்டுத் தாளிதம் செய்து மசாலை கொட்டிக் கொதிக்க விடவும். நன்றாகக் கொதித்து குழம்பு சிறிது சுண்டியதும் கொப்பரைத் தேங்காய் மூடி ஒன்றைத் துருவி, சிவக்க வறுத்து, அம்மியில் வைத்து அரைத்து சிறிது ஜலத்தில் கரைத்துக் கொண்டு விடவும். பிறகு தயார் செய்து வைத்திருக்கும் பால் கட்டிகளைப் போட்டு, ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

No comments:

Post a Comment