Monday, February 28, 2011

உருளைக் கிழங்கு மசாலாப் பொரியல்

நெல்லிக்காய் அளவு உள்ள உருளைக் கிழங்கை 300 கிராம் எடுத்து ஜலத்தில் போட்டு அரைப் பதமாக வேக வைத்துத் தோல் உரித்துக் கொள்ளவும்.

5 மிளகாய் வற்றல், கால் தேக்கரண்டி சீரகம், கால் தேக்கரண்டி சோம்பு, வெள்ளைப் பூண்டு பருப்பு இரண்டு, தேங்காய் கால் மூடி, கசகசா கால் தேக்கரண்டி இவற்றை எல்லாம் அம்மியில் வைத்து வெண்ணெய்ப் போல் அரைத்துக் கொள்ளவும்.

50 மில்லி நீரில் சுண்டைக்காய் அளவு புளி, ஒன்றரைத் தேக்கரண்டி உப்பு இந்த இரண்டையும் கரைத்துக் கொண்டு அதில் அரைத்து வைத்திருக்கும் மசாலாவைக் கரைத்துக் கொள்ளவும்.

பிறகு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து நல்லெண்ணெய் நான்கு தேக்கரண்டி விட்டுக் காய்ந்ததும் கடுகு கால் தேக்கரண்டி உளுத்தம் பருப்பு ஒரு தேக்கரண்டி கடலைப் பருப்பு அரைத் தேக்கரண்டி கறிவேப்பிலை ஆர்க்கு ஒன்று, மிளகாய் வற்றல் ஒன்று இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டுத் தாளிதம் செய்து உரித்து வைத்திருக்கும் உருளைக் கிழங்கைக் கொட்டி கிழங்கு உடைந்து போகாமல் நான்கு முறை புரட்டிக் கொடுக்கவும்.

பிறகு கரைத்து வைத்திருக்கும் மசாலாவைக் கொட்டி கிளறிவிட்டு ஜலம் வற்றும் வரை சிறிது நேரத்துக்கு ஒரு முறை கிளறிக் கொடுத்து இறக்கவும்.

No comments:

Post a Comment