200 கிராம் கத்தரிப்பிஞ்சை காம்பு போக்கி நீளவாட்டத்தில் நான்கை அரிந்து ஜலத்தில் ஒரு தேக்கரண்டி உப்பும், சிறிது மஞ்சள் தூளும் போட்டு வேக வைத்து ஜலத்தைக் கொட்டி விட்டு காயை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் 5 தேக்கரண்டி நெய்விட்டுக் காய்ந்ததும் கடுகு அரைக்கால் தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு அரைத் தேக்கரண்டி, வற்றல் மிளகாய் ஒன்று, கறிவேப்பிலை ஆர்க்கு ஒன்று இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு தாளிதம் செய்து வேக வைத்திருக்கும் காயை தாளிதத்தில் கொட்டிப் புரட்டிக் கொடுக்கவும்.
சீரகம் அரைத் தேக்கரண்டி, மிளகு கால் தேக்கரண்டி இந்த இரண்டையும் பொடி செய்து காயில் தூவிப் புரட்டி, மூன்று தேக்கரண்டி தேங்காய்த் துருவல் போட்டுக் கிளறி இறக்கவும்.
வேறு வகை:
பிஞ்சுக் கத்தரிக்காய் 200 கிராம் இதைக் காம்பு போக்கி நீளவாட்டத்தில் அரை விரல் நீளம் அரிந்து ஜலத்தில் போட்டு வைக்கவும்.
மிளகு ஆறு, மஞ்சள் சுண்டைக்காய் அளவு, மிளகாய் வற்றல் இரண்டு இவற்றை வறுத்து அரைத்து சிறிது தண்ணீரில் கெட்டியாய்க் குழப்பிக் கொள்ளவும். கத்தரிக்காய்த் துண்டுகளை இதில் சேர்த்துக் குழப்பி அரைத் தேங்காய் மூடியின் பாலை வார்த்து உப்பு ஒரு தேக்கரண்டி போட்டு அடுப்பின் மீது வைத்து ஒன்றாய் வேக விடவும். வெந்ததும் தாளிப்புக்குப் பாத்திரம் வைத்து நெய் இரண்டு தேக்கரண்டி விட்டுக் காய்ந்ததும் கறிவடகம் இரண்டு தூள் செய்து போட்டு, கத்தரிக்காயைத் தாளிப்பில் கொட்டிக் கிளறிவிட்டு, கறி மசாலாப் பொடி ஒரு தேக்கரண்டி போட்டுப் புரட்டி இறக்கவும்.
No comments:
Post a Comment