Thursday, February 24, 2011

சேப்பங்கிழங்கு சாம்பார்

ஜலம் 500 மில்லி, புளி நெல்லிக்காய் அளவு, உப்பு கால் தேக்கரண்டி இந்த மூன்றையும் ஒன்று சேர்த்து புளியைக் கரைத்துக் கொள்ளவும்.

பிறகு 200 கிராம் சேப்பங்கிழங்கை அலம்பி புளி ஜலத்தில் போட்டு அடுப்பில் வைக்கவும். கிழங்கு செம்மையாய் வெந்ததும் இறக்கி, ஜலத்தைக் கொட்டி விடவும்.

300 மில்லி ஜலத்தில் எலுமிச்சங்காய் அளவு புளியும், 3 தேக்கரண்டி உப்பு போட்டுக் கரைத்து அடுப்பில் வைத்து சுத்தப்படுத்தி வைத்திருக்கும் சேப்பங்கிழங்கை போடவும். ஒரு தக்காளிப் பழத்தை நான்காய்த் துண்டித்து மூன்று பச்சை மிளகாயை காம்பு போக்கி நுனிப்பக்கம் சிறிது பிளந்து குழம்பில் போடவும்.

இரண்டு கொதி வந்ததும் சாம்பார்ப்பொடி இரண்டு தேக்கரண்டி போட்டு கிளறிக் கொடுத்து மூடவும். ஒரு கொதி வந்த பின்னர் வெந்த துவரம் பருப்பு நான்கு மேஜைக்கரண்டி எடுத்து செம்மையாய்க் கரைத்து குழம்பில் கொட்டிக் கிளறி விடவும்.

குழம்பு நன்றாய்க் கொதித்துப் பக்குவமானதும் ஒரு தேக்கரண்டி அரிசி மாவை சிறிது ஜலத்தில் கரைத்து குழம்பில் கொட்டிக் கிளறி விடவும்.

பிறகு இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு கால் தேக்கரண்டி, கடலைப் பருப்பு அரைத் தேக்கரண்டி, மிளகாய் வற்றல் ஒன்று, கறிவேப்பிலை ஆர்க்கு ஒன்று இவற்றைப் போட்டு தாளிதம் செய்து குழம்பில் கொட்டிக் கொதிக்க விடவும்.

கொஞ்சம் பெருங்கயாத்தை  சிறிது ஜலத்தில் கரைத்து விட்டு, மல்லித்தழை சிறிது போட்டு இறக்கவும்.

No comments:

Post a Comment