Thursday, February 24, 2011

முப்பருப்பு சாம்பார்

நாற்பது மொச்சையை ஊற வைத்து தோல் போக்கி பருப்பாக எடுத்துக் கொள்ளவும். 50 கிராம் துவரம் பருப்பு, 25 கிராம் காராமணிப் பருப்பு இரண்டையும் மொச்சையுடன் சேர்த்து 200 மில்லி ஜலத்தில் வேக விடவும்.

200 கிராம் அவரைக்காயை காம்பு முதலியன போக்கி பருப்பில் போட்டு வேக விடவும். காய் முக்கால் பதம் வெந்ததும் எலுமிச்சங்காய் அளவு புளியும், மூன்று தேக்கரண்டி உப்பும் போட்டு ஒன்றரை ஆழாக்கு ஜலத்தில் கரைத்து அவரைக்காய் நன்றாக வேக விடவும். 8 மிளகாய் வற்றல், கால் தேக்கரண்டி மிளகு, ஒரு தேக்கரண்டி வெந்தயம், ஒரு தேக்கரண்டி கடலைப் பருப்பு, இரண்டு தேக்கரண்டி தேங்காய்த் துருவல் இவற்றை நெய்யில் வறுத்து அம்மியில் வைத்து வெண்ணெய்ப் போல் அரைத்து அம்மியை அலம்பி எடுத்து 150 மில்லி ஜலத்தில் கரைத்து கொதிக்கும் சாம்பாரில் விடவும்.

சாம்பார் கொதித்து மசாலை நெடி போனதும் இறக்கிக் கொண்டு தாளிப்புக்கு ஒரு பாத்திரம் வைத்து நல்லெண்ணெய் 3 தேக்கரண்டி விட்டுக் காய்ந்ததும் அரைத் தேக்கரண்டி கடுகு, கறிவேப்பிலை ஆர்க்கு ஒன்று, சீரகம் கால் தேக்கரண்டி போட்டு தாளிதம் செய்து சாம்பாரை அதில் கொட்டி ஒரு கொதி வந்ததும் இறக்கவும். 10 மல்லித் தழையை கிள்ளிப் போடவும்.

No comments:

Post a Comment