Thursday, February 24, 2011

காராமணிப் பயறு குழம்பு

முக்கால் லிட்டர் கொள்கிற குழம்பு செய்யும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அரை ஆழாக்குக் காராமணிப் பயறு போட்டு வறுக்கவும். நன்றாக வறுபட்டதும் 300 மில்லி ஜலம் விடவும். புளிப்புள்ள மாங்காய் வற்றல் 5 அலம்பிப் போட்டு மூடி வைக்கவும். சிறிது மஞ்சள் தூளும் போடவும்.

பிறகு 300 மில்லி ஜலத்தில் பாதி எலுமிச்சங்காய் அளவு புளியும் மூன்று தேக்கரண்டி உப்பும் போட்டுக் கரைத்து மூன்று தேக்கரண்டி சாம்பார்ப் பொடி போட்டு நன்றாக கரைத்துக் கொள்ளவும்.

காராமணிப் பயறு நன்றாக வெந்ததும் இந்த புளிக் கரைசலை அதில் கொட்டிக் கிளறி விடவும்.

ஒரு தக்காளிப் பழம் நன்றாகப் பழுத்ததை நான்காக அரிந்து கொள்ளவும். பெரிய வெங்காயம் ஒன்றாய் நீளவாட்டில் பொடிப் பொடியாக அரிந்து கொள்ளவும்.

பிறகு தாளிப்புக்கு ஒரு பாத்திரம் வைத்து இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டுக் காய்ந்ததும், கடுகு கால் தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு அரைத் தேக்கரண்டி, கறிவேப்பிலை ஆர்க்கு ஒன்று, மிளகாய் வற்றல் ஒன்று போட்டுத் தாளிதம் செய்து, அரிந்து வைத்திருக்கும் தக்காளிப் பழத்தையும் வெங்காயத்தையும் தாளிப்பில் போட்டு வதக்கவும்.

அதன் பின்னர் காராமணிப் பயறு நன்றாக வெந்ததும் இந்தத் தாளிப்பில் குழம்பைக் கொட்டிக் கொதிக்கவிடவும்.

ஒரு கொதி வந்ததும் இறக்கி பத்து மல்லித் தழை கிள்ளிப் போடவும். வெள்ளைப் பூண்டை உரித்து இரண்டு பருப்புகளை நசுக்கிப் போட்டு கலக்கவும்.

No comments:

Post a Comment