Friday, March 18, 2011

சமையல் குறிப்புகள்


1.     ஊத்தப்பத்தின் நடுவில் துவாரம் செய்து ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டால் மேலும் கரகரப்பாக ருசியாக இருக்கும்.

2.     கூட்டு, குழம்பு ஆகியவற்றுக்கு அரிசிமாவைக் கரைத்து விடுவதற்குப் பதில் பொட்டுக்கடலை மாவைச் சேர்த்து விடலாம். சீக்கிரம் ஊசிப் போகாது.

3.     தனியா, சீரகம், வற்றல், மிளகாய், பொட்டுகடலை, பெருங்காயம் ஆகியவற்றைப் பொடி செய்து ஒரு பாட்டிலில் வைத்துக் கொண்டு பொரியலில் கடைசியில் தூவி எடுக்க மிகவும் ருசி கொடுக்கும்.

4.     மிளகாய்ப் பொடியுடன் தயிரைக் குழைத்து இட்லி அல்லது தோசைக்குத் தொட்டுச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

5.     சப்பாத்தியின் மேல் சர்க்கரை, ஏலம் கலந்த தேங்காய்ப் பாலை ஊற்றி 5 நிமிடம் கழித்துச் சாப்பிடக் கொடுங்கள். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

6.     பூரி மாவுடன் சிறிது தயிர் சேர்த்துப் பிசைந்தால் பூரி மிருதுவாக இருக்கும்.

7.     தோசை வார்க்க நல்லெண்ணையைக் கலந்து ஊற்றினால் கலவை ஒட்டாது. சிறிதளவு எண்ணெய் ஊற்றினாலும் நிறைய ஊற்றிய மாதிரி இருக்கும்.

8.     இட்லிப் பொடி செய்யும் பொழுது சிறிது கறிவேப்பிலையும் போட்டு மிக்ஸியில் அரையுங்கள். ருசியோ அபாரம். உடலுக்கும் நல்லது.

9.     ரவையை டால்டா விட்டுச் சிவக்க வறுத்து காய்ச்சிய பாலில் ஊறவைத்துப் பிறகு சர்க்கரைப் பாகு வைத்துக் கேசரி கிளறினால் அதிக டால்டாவும் செலவில்லை. ருசியும் இரட்டிப்பாகும்.

10. குலோப் ஜாமூன் பாகில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு இறக்கினால் பாகு உறையாமலும் கெட்டுப் போகாமலும் இருப்பதுடன் சுவையும் கூடுதலாகி நன்றாக இருக்கும்.

11. ரவா உப்புமா மிஞ்சி விட்டால் அதில் சிறிதளவு அரிசி மாவைக் கலந்து வடைபோல் தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கலாம்.

12. லட்டு செய்யும் போது கலவையில் இரண்டு சொட்டு ஏதாவது ஒரு பழ எசென்ஸ் விட்டு கலந்து பிடியுங்கள். சுவை கூடுதலாவதுடன் மணமாகவும் இருக்கும்.

13. பச்சைக் கொத்தமல்லித் தழைத் துவையல் அரைக்கும் பொழுது மிளகாய்க்குப் பதில் மிளகை வறுத்து வைத்து அரைத்து விடுங்கள். மணம் மாறுதலாக இருப்பதுடன் சுவையும் கூடுதலாகும்

14. பொரியல் செய்யும் பொழுது காரப் பொடிக்குப் பதிலாக தேங்காய்ப் பொடி சேர்த்தால் பொரியலின் சுவை மிகவும் நன்றாக இருக்கும்.

15. தனி ஜவ்வரிசி மட்டும் போட்டு பாயசம் செய்யும் போது 2 ஸ்பூன் வறுத்த கோதுமை மாவையும் பாலில் கரைத்து ஊற்றிச் செய்தால் பாயசம் கெட்டியாக இருப்பதோடு மணமாகவும் இருக்கும்.

16. வெண்டைக்காய் கறி செய்யும் போது சிறிது தயிர் ஊற்றி வதக்கினால் வழவழப்பு நீங்கி மொரமொரப்பாய், சுவையாய் இருக்கும்.

17. உருளைக்கிழங்கு காரக்கறி செய்யும் போது அதில் அரைக் கரண்டி புளிப்பில்லாத கெட்டித் தயிர் ஊற்றி வதக்கினால் மிகவும் சுவையாக இருக்கும்.

18. தினமும் சேகரிக்கும் பால் ஆடையை வாரத்தில் ஒரு நாள் இரவில் சிறிது தயிர் ஊற்றி உறைய வைத்து மறுநாள் காலை ஒரு சாதாரண சமையல் கரண்டியினால் சுழற்றிக் கொண்டிருந்தால் ஐந்தே நிமிடங்களில் வெண்ணெய் திரண்டு விடும்.

19. கொழுக்கட்டை மாவு கிளரும் போது நீருடன் ஒரு கரண்டி பால்விட்டுக் கிளறினால் கொழுக்கட்டை விரிந்து போகாமல் இருக்கும்.

20. புதினா அதிகமாகக் கிடைக்கும் காலத்தில் வாங்கி உலர வைத்துக் கொண்டால், மசாலா சேர்த்துத் தயாரிக்கும் உணவில் சேர்த்தால் மணமாக இருக்கும்.

21. சிறிது சர்க்கரை கலந்த நீரில் கீரையை ஊறவைத்து பிறகு சமையல் செய்து சாப்பிட்டால் கீரை தனி ருசி தரும்.

22. முட்டைக்கோசை நறுக்கும் போது அதில் உள்ள தண்டுகளை எறிந்து விடாமல் அவற்றை சாம்பாரில் போட்டு சமைத்துச் சாப்பிட்டால் பிரமாதமாக இருக்கும்.

23. குழம்பை அடுப்பில் இருந்து இறக்கி வைக்கும் முன் சிறிது வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து போட்டால் குழம்பு மணக்கும்.

24. தேங்காய்த் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்துச் சமைத்தால் சுவையாக இருக்கும்.

25. தேங்காய் பர்பி செய்யும் போது வேர்க்கடலையில் சிவப்புத் தோலை நீக்கி இரண்டாக உடைத்து நெய்யில் பொரித்து போட்டால் நன்றாக இருக்கும்.

26. காலிபிளவர், முட்டைக்கோசு கூட்டு செய்யும் போது அரை ஸ்பூன் இஞ்சிச் சாறு ஊற்றிச் செய்வது நல்லது. ருசியாக இருக்கும்.

27. ரவையை உப்புப் போட்டு பிசறி வைத்து அதனுடன் உளுந்தை அரைத்துப் போட்டு தோசை வார்த்தால் அது நன்றாக இருக்கும்.

28. கொத்தமல்லி சட்னி மீந்து போய்விட்டால், மோரில் சட்னியைப் போட்டுக் கரைத்து விடுங்கள். மசாலா மோர்ப் போலச் சுவையாக இருக்கும்.

29. வறுத்த புழுங்கல் அரிசியை, மாவாக்கி வைத்துக் கொண்டால், கூட்டு கறிகளை இறக்கும்போது லேசாகத் தூவி இறக்கினால் வாசனை கூடுதலாக இருக்கும்.

30. பஜ்ஜிக்கு காரம் அதிகம் விரும்பாதவர்கள், உப்பு ஓமம் அரைத்துவிட்டுச் செய்து பாருங்கள். பிரமாதமாக இருக்கும்.

31. வடாமுடன் சிறிது கறிவேப்பிலையை அரைத்துக் கலந்து செய்தால் வடாம் தனி ருசியுடன் மணமாக இருக்கும்.

32. காய்கறி மற்றும் பழங்களை சிறிதளவு வினிகர் கலந்த குளிர்ந்த நீரில் ஒரு சில நிமிடங்கள் போட்டு வைத்தால் கிருமிகள் இறந்து விடும்.

33. பூண்டு, வெங்காயம் போன்றவைகளை நறுக்குவதால் கத்தியில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்க, சிறிதளவு உப்பை கத்தியில் தடவி குளிர்ந்த நீரில் கழுவவும்.

34. பால் பாத்திரத்தின் அடியில் ஒட்டிக் கொள்ளாமல் இருக்க பாத்திரத்தை முதலில் குளிர்ந்த நீரால் நன்கு கழுவ வேண்டும்.

35. உருளைக்கிழங்கு மற்றும் காலிபிளவர் ஆகிய காய்கறிகளை சமைக்கும் போது தண்ணீரில் சில சொட்டு வினிகரை சேர்த்தால் அவற்றின் நிறம் மாறாது.

36. ஊறுகாய் தயாரிக்கும் போது கடுகுக்கு பதில் சிறிதளவு சோம்பை தாளித்துக் கொட்டலாம். சுவையாக இருக்கும்.

37. தேங்காய்ச் சாதம் எலுமிச்சை சாதம் செய்யும் போது கடலைப் பருப்புக்குப் பதில் பொட்டுக்கடலை போடலாம். சத்தும் அதிகம்.

38. பட்டாணி சமைக்கும் போது சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் நல்ல மணமாக இருக்கும்.

39. தோசை சுடும் முன்பு தோசைக் கல்லில் சிறிதளவு உப்பை வைத்துத் துடைத்தால் கல்லில் தோசை ஒட்டாமல் வரும்.

40. பாகற்காயில் இருக்கும் கசப்பைப் போக்க வேண்டுமானால் அதைச் சமைக்கும்போது காயுடன் சிறிதளவு எலுமிச்சம் பழச் சாற்றைச் சேர்த்தால் போதும்.

41. பருப்பு நன்றாக வேக வேண்டுமென்றால் பருப்புடன் சிறிதளவு நெய்யைச் சேர்த்து வேக விட்டால் போதும்.

42. குழம்பு கூட்டு போன்றவை தயார் செய்யும் பொழுது மாங்காய் சீசனில் புளிக்குப் பதிலாக மாங்காய் சேர்க்கலாம்.இது புது மாதிரியான புளிப்புச் சுவையாக இருக்கும்.

43. கீரையை வேகவைக்கும் போது நீரில் கொஞ்சம் உப்பு சேர்த்து வேக வையுங்கள். கீரையின் நிறம் மாறாமல் இருக்கும், சுவையும் அதிகமாகும்.

44. பக்கோடா செய்யும் போது மொரமொரப்பாக இருக்க வேண்டுமானால் மாவைக் கலக்கும் போது சிறிதளவு நெய்யும், உப்பும், தயிரும் போட வேண்டும்.

45. மிக்சர் செய்யும் போது கடைசியில் ஒரு கைப்பிடி சர்க்கரையைச் சேர்த்துக் கொள்ளுங்கள். சுவையாக இருக்கும்.

46. அடைக்கு அரைக்கும் போது ஒரு கேரட்டை துருவிப் போட்டு அரைத்து அடை வார்த்தால் அடை நல்ல நிறத்துடன் ருசியாக இருக்கும்.

47. அரிசியை மட்டும் ஊறவைத்து, நைசாக அரைத்து வெள்ளைப் பூசணியின் பஞ்சு போன்ற பாகத்தை இந்த மாவுடன் சேர்த்து அரைக்க வேண்டும். மறுநாள் வார்க்க தோசை மிருதுவாக இருக்கும்.

48. மோரோ, தயிரோ இல்லாவிட்டால் புளியை கொஞ்சம் கெட்டியாக கரைத்துக்கொண்டு அதில் உப்பு சேர்த்து மிளகாய்களை ஊறவைத்து காய வைக்கலாம். மோர் மிளகாயை விட ருசியாக இருக்கும்.

49. கருணைக்கிழங்கை வேக வைக்கும் போது கொஞ்சம் புளிய இலைகளையும் சேர்த்துக் கொண்டால் கிழங்கின் அரிக்கும் தன்மையை இது எரித்துவிடும்.

50. பாலை புரை ஊற்றி வைக்கும் போது அதில் கொஞ்சம் அரிசிக் கஞ்சியை கலந்து ஊற்றி வைத்தால் தயிர் பெயர்த்து எடுக்கும்படி கெட்டியாகி விடும்.

51. கறிவேப்பிலை துவையலுக்கு உளுத்தம் பருப்புத் தாளிப்பதற்குப் பதில் நிலக்கடலையை வறுத்துப் போட்டால் துவையல் சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.

52. கீரை பயத்தம் பருப்பு கூட்டு செய்யும் போது  ஒரு கப் பாலை விட்டால் மணமாக இருக்கும்.

53. வாழைத்தண்டுக் கூட்டு மற்றும் பொரியல் செய்யும் பொழுது அதனுடன் சிறிது முருங்கைக் கீரையையும் சேர்த்துச் செய்தால் சுவையும் மணமும் மிகவும் நன்றாக இருக்கும். உடம்புக்கு மிகவும் நல்லது.

54. பருப்புத் துவையலுக்கு தேங்காய் இல்லை என்றால் இரண்டு பல் பூண்டை உரித்து வைத்து அரைத்தால் துவையல் சுவையாக இருப்பதோடு கமகமவென்றும் மணக்கும்.

55. சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் உங்கள் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது.

56. காலிபிளவர் சமைக்கும் போது ஒரு துளி பால் சேர்த்தால் பூ போன்ற வெள்ளை கலர் மாறாமல் இருக்கும். பச்சை வாடையும் வராது.


57. உணவில் அதிக அளவு உப்பு சேர்ந்துவிட்டால் உரித்த உருளைக்கிழங்கை அப்படியே உணவில் போட்டு விடுங்கள். உணவில் அதிகமாக இருந்த உப்பு குறைந்துவிடும்.

58. எண்ணெய் பலகார டப்பாவில், உப்பைத் துணியில் முடிந்து வையுங்கள். காரல் வாடை வராது.

59. சீடை செய்யும் போது அது வெடிக்காமல் இருக்க சீடையை ஊசியால் குத்திய பிறகு எண்ணெயில் போடுங்கள்.

60. தேங்காய் துவையலுக்குத் தேவையான சாமான்களைத் தாளிக்கும் போது சிறிது தனியாவையும் சேர்த்து அரைத்தால் துவையல் மிகவும் ருசியாக இருக்கும்.

61. ஒரு கப் துவரம் பருப்பு, அரை கப் கடலைப் பருப்பு, கால் கப் பயற்றம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து பருப்புப் பொடி அல்லது பருப்புத் துவையல் செய்தால் புது வித சுவையுடன் இருக்கும்.

62. ஆம்லெட் செய்யும் போது சிறிதளவு வெண்ணெயையும் முட்டையில் கலந்து நன்றாக கலக்கி ஆம்லெட் செய்து பாருங்கள். ருசியாக இருக்கும்.

63. சாதம் செய்யும் போது சிறு துளி எலுமிச்சை சாறு விட்டால் சாதம் பூப்போல இருக்கும்.

64. கீரை மசியல் செய்யும் போது சிறிது சோறு வடித்த கஞ்சியை விட்டு மசித்தால் நன்கு குழைவாக மசியும்.

65. இட்லிக்கு அரிசி ஊறவைக்கும்போது ஒரு பிடி அவல் சேர்த்து அரைத்தால் இட்லி சாஃப்ட்டாக இருக்கும்.

66. பூரி செய்யும் போது பூரி மாவுடன் சிறிது ரவையையும் போட்டு பிசைந்து பூரியினை சுட்டால், பூரி வெகு நேரம் மொறுமொறுவென்று இருக்கும்.

67. இறைச்சி வேக வைக்கும் போது சிறிது பாக்கு சேர்த்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்து விடும்.

68. கிழங்குகள் சீக்கிரம் வேக வேண்டுமா? பத்து நிமிடம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்து வேக வைத்தால் எளிதில் வெந்துவிடும்.

69. சமையலில் உப்பு சற்று கூடுதலா? கவலை வேண்டாம். பால், க்ரீம், தயிர் இவற்றில் ஏதோ ஒன்றினைச் சேருங்கள். சரியாகிவிடும்.

70. முட்டைக்கோசை இஞ்சியுடன் சேர்த்து வதக்கி பச்சை மிளகாய், உப்பு சேர்த்து தயிருடன் அரைத்தால் பச்சடி நன்றாக இருக்கும்.

71. பச்சைப் பட்டாணியை ஊறவைத்து, உப்பு மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வடை தட்டினால் கரகரப்பாக நன்றாகவே இருக்கும். கோஸ் அல்லது வெங்காயம் கீரை போட்டு தட்டலாம்.

72. கறிவேப்பிலை துவையலுக்கு உளுத்தம் பருப்புக்கு பதில் வேர்க்கடலையை வறுத்து போட்டால் துவையல் சுவையாக இருக்கும்.

73. தேங்காய் துவையல் அரைக்கும் பொழுது சிறு துண்டு இஞ்சியையும் சேர்த்து அரைத்தால் துவையல் மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.





















No comments:

Post a Comment